பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மக்கள் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகிலபாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, “பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற அப்பகுதி மக்கள் பாரதத்தை எதிர்நோக்கியுள்ளனர். பாரதத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் பலமுறை முயற்சித்தது, ஆனால் அதன் முயற்சிகள் பாதுகாப்புப் படைகளாலும் தேசபக்தியுள்ள மக்களாலும் முறியடிக்கப்பட்டன. 1947ல் ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் பெரும் பகுதிகள் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட அப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் எப்போது தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.
இப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது வசித்து வருகின்றனர். இத தாக்குதலின் போது தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினரையாவது இழக்காத குடும்பம் என்று இங்கு ஒன்றுகூட இல்லை. இதுபோன்ற துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டாலும், அவர்கள் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் வாழும் அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்காளிகளாகிவிட்டனர்.
பாகிஸ்தான் 1947ல் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. பல அட்டூழியங்களைச் செய்தது, இனப்படுகொலைகளை நிகழ்த்தியது. ஆனால் பாரத இராணுவம் பாகிஸ்தானின் பிடியில் இருந்து பழைய சமஸ்தானத்தை பாதுகாத்தது. பாகிஸ்தான் ராணுவம், மிர்பூர் நகரில் மட்டுமே சுமார் 25,000 பேரைக் கொன்றது. மற்ற பகுதிகளிலும் இதே போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முயற்சிகளை முறியடித்த பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் மக்களும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். 1947 முதல், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் போரை பரப்புவதற்கு பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. நமது ராணுவமும் காவல்துறையும் அதற்கு எதிராக போராடுகின்றன. அவர்களுடன் இணைந்து போராடும் மண்ணின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பெருமையையும், துணிச்சலையும் நினைவுகூரும் அதே வேளையில், ‘ஆசாதி கா அம்ரித் மோகத்சவ்’ நிகழ்ச்சியின் போது, கார்கில் விஜய் திவஸை நினைவுகூருகிறோம். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருடன் இன்று நான் இருப்பதால், இன்று எனக்கு பொன்னான நாள். பல தலைமுறைகளின் போராட்டத்திற்கு பிறகே நாம் சுதந்திரம் பெற்றோம். புதிய தலைமுறையினர் தேசபக்தர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து பாரதத்தை மகத்துவமாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் பல விதிகள் முன்பு ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தாமல் இருந்தது. ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி அதற்கு எதிராக முதல் வெகுஜன இயக்கத்தைத் தொடங்க தூண்டினார்” என பேசினார்.
ஜம்முவில் நடைபெற்ற கார்கில் விஜய் திவாஸ் விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகள் சட்டவிரோதமாக பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை விடுவிக்கும் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், காஷ்மீர் பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இப்போதும் இருக்கிறது, அது எப்போதும் ஒரு பகுதியாகவே இருக்கும். சிவன் வடிவில் பாபா அமர்நாத் எங்களுடன் இருக்கையில், அன்னை சாரதா தேவி மட்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மறுபுறம் இருப்பதும் எப்படி? என்று கேள்வியெழுப்பிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.