அரசின் தவறுக்கு மக்கள் பலிகடா

தமிழக மின்சார வாரியம் உத்தேசித்துள்ள கட்டண உயர்வின் அடிப்படையில் இலவச மின்சாரம் பெறுவோர் தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். மின்சார வாரியத்தின் தவறுகளுக்காக மின்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை தண்டிக்கக்கூடாது. 52 சதவீத மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்றும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழக மின்சார வாரியத்தின் கடன்சுமை ரூ.1,59,823 கோடியாகவும், வட்டியாக செலுத்தப்படும் தொகை ரூ.16,511 கோடியாகவும் அதிகரித்து விட்டதாகவும், அவற்றை சமாளிக்க 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். வாரியத்தின் கடன் சுமை அதிகரித்ததற்கு உதய் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது, வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது, மின்னுற்பத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்தி முடிக்கப்படாததால் அவற்றின் திட்டச் செலவு அதிகரித்தது, மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக வாங்கப்பட்ட கடன் மீதான வட்டி ரூ.12,647 கோடியாக அதிகரித்திருப்பது, வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு நிலக்கரி வாங்கியது ஆகியவை தான் காரணம் என்று அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். மின்சார வாரியத்தின் இழப்புக்கு எந்த விதத்திலும் பொதுமக்கள் காரணம் அல்ல. அனைத்துக்கும் நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம் என்பதை அமைச்சரின் விளக்கத்திலிருந்தே உணர முடியும். யாரோ செய்த தவறுகளுக்காக, எந்தத் தவறும் செய்யாத மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? தமிழக அரசு உத்தேசித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வை கைவிட வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணைய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.