ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்தது. ஜென் குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார். அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும், ஆட்சி சிறப்பாக நடந்தும் மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும், தனக்கு மட்டும் மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார். உடனே குரு,”ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,”என்று சொல்ல, மன்னனும் சிறிது கூட யோசிக்காமல், ‘எடுத்தக் கொள்ளுங்கள் குருவே’ என்றார்.
குரு,”நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார். மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார். அதற்கு குரு,”எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்? நீ என்னிடமே வேலை பார்க்கலாமே? என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா. ஆண்டுக்கு ஒருமுறை நான் இங்கு வந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொல்ல மன்னனும் ஒப்புக்கொண்டார். ஒரு ஆண்டு கழித்து குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து, ”நாடு எப்படி இருக்கிறது? வரவு செலவு எப்படி இருக்கிறது? நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்.
மன்னனும், ”நாடு சுபிட்சமாக இருக்கிறது. நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன். இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,” என்று சொன்னார். அதற்கு குரு,”அதற்கெல்லாம் அவசியமில்லை. நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய். ஆனால் முன்னால் இந்த நாடு, ‘என்னுடையது’ என்று நினைத்து வேலை செய்தாய், அதனால் உனக்கு நிம்மதி இல்லை. இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய். இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,” என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை பெற்றார்.