தி.மு.கவை சேர்ந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியகராஜன் பேசிய முதல் ஆடியோவால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அவர் பேசிய மற்றொரு ஆடியோ நேற்று வெளியாகியுள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.க சுற்றுச்சூழல் அமைப்பு சிதைவதை உள்ளிருந்து கேளுங்கள். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் 2வது டேப். தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய தமிழக நிதியமைச்சருக்கு சிறப்பு நன்றிகள்! #தி.மு.க ஃபைல்ஸ்” என குறிப்பிட்டு இந்த ஆடியோ பதிவை தனது சமுக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் பேசியுள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியகராஜன், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். நிதி மேலாண்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால், அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும். எப்படி சொல்வது? நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதை பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை” என பேசியுள்ளார்.