மன்னிப்பு கோரிய பவன் கேரா

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான பவன் கேரா, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் மோடியின் பெயரை வேண்டுமென்றே தவறாக உச்சரித்தார். அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தி பேசிய அவர், பிரதமர் மோடியின் பெயரை அதானியின் பெயருடன் கலந்து பேசி கிண்டல் செய்தார். இதற்கு பா.ஜ.கவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பவன் கேராவுக்கு எதிராக பல வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி விரைந்த அசாம் காவல்துறையினர், டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையின் உதவியோடு டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் பயணப்பட தயாராக இருந்த பவன் கேராவை கீழிறக்கி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிப்ரவரி 28 வரை பவன் கேராவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து பவன் கேரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ’பிரதமர் பெயரை தான் தவறாக உச்சரித்து விட்டதாகவும், நாக்கு தடுமாறியதில் எழுந்த பிழை இது’ என்றும் குறிப்பிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் பவன் கேரா. எனினும் அவருக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.