4வது நாளாக முடங்கும் பார்லி.; நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டம்?

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், 4வது நாளாக இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தில் சமீபத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி பார்லிமென்ட் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபோதும், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்காமல் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக குரல் கொடுத்தனர். இதனால் கடந்த 3 நாட்களாக பார்லி.,யின் இரு அவைகளும் முடங்கின. இந்த நிலையில், இன்று (ஜூலை 25) 4வது நாள் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.,வின் பார்லி., குழு கூட்டம் நடைபெற்றது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பா.ஜ., அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது. பிறகு கூடிய பார்லி., அவைகளில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 4வது நாளாக லோக்சபா, ராஜ்யசபா முடங்கியது. லோக்சபா 2 மணி வரையும், ராஜ்யசபா 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.