காகிதப் பைகள் தினம்

பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க உதவும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பரப்ப, ஜூலை 12 அன்று காகிதப் பைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதிலும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் மோசமான விளைவுகளை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

காகித பைகள் புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.  அவை மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மக்கும் தன்மை கொண்டவை. அதே சமயம் முறையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டால் அவை வலிமையானவையும்கூட.

காகிதப் பைகள் கிட்டத்தட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் காகிதத்தால் ஆன பைகளை பலரும் தினமும் பயன்படுத்துகின்றனர்.

உலகமயமாக்கல், காலநிலை மாற்றம் மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக மக்கள் நிலையான வாழ்க்கை முறை தேர்வுகளை பின்பற்றுகிறார்கள், அவற்றில் காகிதப் பைகளும் ஒன்று.

காகிதப் பைகளைப் பயன்படுத்துவது என்பது, எதிர்கால சந்ததியினருக்கு நமது பூமியை நாம் பாதுகாப்பாக ஒப்படைக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்றால் அது மிகை அல்ல. பல நாடுகளில், காகிதப் பை நாள் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

1852ம் ஆண்டில், ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பிரான்சிஸ் வோல் முதல் காகிதப் பை தயாரிக்கும் இயந்திரத்தை நிறுவினார். 1871ம் ஆண்டில், மார்கரெட் ஈ. நைட் தட்டையான கீழ்பாகம் கொண்ட காகிதப் பைகளை தயாரிக்கக்கூடிய மற்றொரு இயந்திரத்தை வடிவமைத்தார். 1883ம் ஆண்டில், சார்லஸ் ஸ்டில்வெல், மடித்து சேமிக்க வசதியான சதுரமான அடிபாகத்துடன் கூடிய காகிதப் பைகளை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். 1912ம் ஆண்டில், வால்டர் டியூபனர் காகிதப் பைகளை வலுப்படுத்தவும், சுமந்து செல்லும் கைப்பிடிகளைச் சேர்க்கவும் ஒரு தண்டு பயன்படுத்தினார். இப்படி பல ஆண்டுகளாக, பல கண்டுபிடிப்பாளர்கள் காகித பைகள் உற்பத்தியை மேம்படுத்தினர்.

 

சுகவனேஸ்வரன்