எட்டயபுரத்தில் இன்னும் ஜாதிகள் இருக்குதடி பாப்பா

எட்டயபுரம் அருகே பள்ளியில் பட்டியல் இன பெண் சமையல் செய்வதால் காலை உணவு சாப்பிட குழந்தைகளை பெற்றோர் அனுப்புவதில்லை என புகார் எழுந்தது. அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழகம் முழுவதும் அரசு துவக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 11 மாணவர்கள் பயில்கின்றனர். அங்கும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமையல் பணி மேற்கொள்ளும் முனியசெல்வி பட்டியல் இனத்தவர் என்பதால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவுக்கு அனுப்புவதில்லை என்ற புகார் எழுந்தது. இது குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்தனர். தற்போது இரண்டு குழந்தைகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்க்கண்டேயன், அதிகாரிகள் சென்று பள்ளி தலைமை ஆசிரியர், சமையலர், குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனர். அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், இங்குள்ளவர்களுக்கும் சமையல் செய்பவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்னை காரணமாக குழந்தைகளை அனுப்ப மறுத்துள்ளனர். ஆனால் இது குறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்னை விரைவில் பேசி சரி செய்யப்படும் என்றார். இந்நிலையில் நேற்று சில குழந்தைகள் உணவு சாப்பிட்டனர். சமையலர் முனியசெல்வி கூறுகையில், எனது குழந்தையும் இங்குதான் பயில்கிறது. அனைத்து தகுதிகளுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளேன். இரண்டு குழந்தைகள் தான் சாப்பிடுகிறார்கள். மற்ற குழந்தைகளை ஜாதி பாகுபாடு காரணமாக சாப்பிட பெற்றோர்கள் அனுப்புவதில்லை என தெரிவித்தார். பெற்றோர் தரப்பில் கூறுகையில், எங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு வேண்டாம். மற்றபடி ஜாதி அடிப்படையில் நாங்கள் அனுப்ப மறுக்கவில்லை என கூறினர். சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியின் 102 வது நினைவு தினம் நேற்று நினைவில் கொள்ளப்பட்டது. அவரது சொந்த ஊர் எட்டயபுரத்திலேயே, ஜாதியை காரணம் காட்டி குழந்தைகள் உணவு உண்பது தடுக்கப்படும் அவலம் தொடர்கிறது.