பணநாயகம் வெற்றி பெற்றது

ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவில் எதிர்பார்த்ததை போலவே தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு ஜனநாயகத்திற்கு பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்று விட்டது என்று கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றும் பணநாயக முறையில்தான் தேர்தல் நடைபெற்றது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்தார். “ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்போம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. தி.மு.க அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்கு அளித்துள்ளனர் என்பதை ஏற்க மாட்டோம். 2024 தேர்தலே பா.ஜக.வுக்கான தேர்தல். இடைத்தேர்தல் பா.ஜ.கவுக்கானது அல்ல. பிரதமர் மோடியை ஏற்பவர்களோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமையும்” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ‘ஈரோடு இடைத் தேர்தல் வெட்கப்பட வேண்டிய வெற்றி என கூறியுள்ளார். ‘இப்படி அ.தி.மு.க, பா.ஜ.க என பல்வேறு கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் ஒருமித்த குரலில், ஜனநாயகம், தேர்தல் விதிமுறைகள் எல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டன, இது பணத்தால் விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என கூறி வருகையில், இந்த வெற்றி முதல்வரைச் சேரும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்’ என மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.