பஞ்சாப் மாநிலத்தில் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்துவதற்கு அந்த மாநில அரசு உரிய ஆதரவு தரவில்லை எனவே, அக்னிபத் முகாம்களை அண்டை மாவட்டங்களுக்கு மாற்று திட்டமிட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. பஞ்சாப் தலைமைச் செயலர் வி.கே. ஜன்ஜுவா மற்றும் முதன்மைச் செயலர் குமார் ராகுலுக்கு ஜலந்தர் மண்டல ஆட்சேர்ப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஷரத் பிக்ரம் சிங் எழுதியுள்ள கடிதத்தில், ‘சண்டிகரில் அக்னிபத் முகாமை நடத்த மாநில அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல்கள் இல்லாதது அல்லது நிதி பற்றாக்குறை காரணமாக, உள்ளூர் நிர்வாகம் இதற்கு தேவையான ஆதரவை அளிக்கவில்லை. மாநில அரசின் தெளிவான உறுதிப்பாடுகள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். இதனால் இந்த திட்டம் ஊசலாடுகிறது. சில தவிர்க்க முடியாத தேவைகள் உள்ளூர் நிர்வாகத்தால் கிடைக்கப்பெற வேண்டும். இந்த ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு உறுதியளிக்காவிட்டால் ராணுவத் தலைமையகத்தால் அறிவிக்கப்படும் அனைத்து எதிர்கால ஆட்சேர்ப்பு பேரணிகள் மற்றும் நடைமுறைகளை அண்டை மாநிலத்தில் நடத்துவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ‘பஞ்சாபில் அக்னிவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ராணுவ அதிகாரிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைத்து துணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என்று முதல்வர் பகவந்த் மான் கூறியதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏவும், பஞ்சாப் சட்டசபை சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான், கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் ஹர்ஜித் சிங் பஜ்வாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஒருபுறம், ஆம் ஆத்மி அரசு ராணுவத்திற்கு ஆதரவை வழங்கவில்லை, மறுபுறம், கட்சியினர் தேச விரோத காலிஸ்தானிகளுடன் சந்திப்புகளை நடத்துகிறார்கள் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.