கம்யூனிச கட்சி ஆட்சி செய்யும் சீனாவில் பல ஆண்டுகளாக உய்குர் முஸ்லிகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை உலகே அறியும். தற்போது அங்கே 10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுவது, கருத்தடை, குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுவது, அடிமை வேலை, மறு கல்வி, முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகளை இடித்து அங்கு கழிப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட பல கொடுமைகள் அங்கு தினம்தோறும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஒரு சிலர் தப்பித்து பாகிஸ்தான், துருக்கி, எகிப்து உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு அடைக்கலம் புகுந்தனர். முதலில் அவர்களை ஏற்றுக்கொண்ட அந்த நாடுகள், பிறகு, அவர்களுக்கு முஸ்லிம்களின் மீதான பாசத்தைவிட சீனா தரும் பணத்தின் மீது தான் பாசம் அதிகம் என்பதை நிரூபிக்கும் விதமாக, அங்கு குடியேறிய உய்குர் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி மீண்டும் சீனாவிற்கே திருப்பி அனுப்புகின்றன. சமீபத்தில் சீனாவை பாகிஸ்தானுக்கான ‘புதிய காற்றின் சுவாசம்’ என புகழ்ந்த பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், அதே பேட்டியில் சீனாவின் உய்குர்களின் நிலைமை குறித்து கேட்டபோது ‘அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறி மழுப்பினார். கடந்த 2009ல், உய்குர்கள் மீதான சீனாவின் அடக்குமுறையை ‘இனப்படுகொலை’ என்று குற்றம் சாட்டிய துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், தற்போது அங்கு வாழும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்களை சீனாவிற்கே மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நாடு கடத்தி வருகிறார். முஸ்லிம்களின் தேசம் என கூறிக்கொள்ளும் பாகிஸ்தானும் முஸ்லிம் நாடுகளுக்கு தலைவராக மாற முயற்சி எடுத்து வரும் துருக்கியும் தற்போது தங்கள் உண்மை முகத்தை காட்டியுள்ளதாக உய்குர் முஸ்லிம்களுக்காக போராடும் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.