சங்கத் தமிழ் சாற்றும் சங்கரன் திருநாமங்கள்
தென்னாடுடைய சிவன் வேறு, வடநாட்டுச் சிவன் வேறு என்ற கருத்து சரியா? சிவனைத் தமிழர்கள் தத்துவ வடிவத்தில் மட்டுமே பார்த்தார்கள், ஆனால் ஆரியர்களோ புராணக் கதைகளை வைத்துக் குழப்பியடித்தார்கள் என்ற வாதம் சரியா? இரண்டுமே தவறு. சிவப் பரம்பொருளை பாரத நாட்டினர் அனைவருமே வடக்கு, தெற்கு பேதமின்றி தத்துவ வடிவிலும் தரிசித்தனர், அவற்றின் உருவகங்களான புராண ரூபங்களிலும் பார்த்தனர்.
சிவன் என்ற சொல்லுக்குத் தூய தமிழில் நோக்கினால், சிவந்த நிறமுடையவன் என்று பொருள் வரும். அதே பொருள்தான் சம்ஸ்கிருதத்திலும். அம்மொழியின்படி சிவ என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். தமிழிலே செவ்வாய் என்று கூறப்படும் கிரகத்துக்கு சம்ஸ்கிருதப் பெயர் மங்கள். மேலும் வீடுகளில் சுபவேளைகளின்போது எடுக்கப்படும் ஆரத்திக்கு மங்கள ஆரத்தி என்று பெயர். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து உருவாக்கப்படும் அந்த ஆரத்தியின் நிறம் என்ன? சிவப்பு. இப்போது சொல்லுங்கள், எங்கே இருக்கிறது வேறுபாடு?
சிவனை ருத்ரன் என்கிறது ரிக் வேதம். அதே ருத்ரனைத்தான் சங்கத் தமிழானது ஆதிரை முதல்வன் என்கிறது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. அதுதான் சம்ஸ்கிருதத்திலே ஆருத்ரா என்றழைக்கப்படுகிறது. திருவாதிரைத் திருநாளின்போது சிதம்பரம் தலத்திலே நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை நினைவு கொள்க. ருத்ரன் சிவபெருமானின் அம்சம். உலகைக் காப்பதற்காக, சிவனிடமிருந்து ஏகாதச (பதினோரு) ருத்ரர்கள் தோன்றினர் என்பது புராணத்தின் உருவகம். அதனைத்தான் பரிபாடலில் புலவர் நல்அந்துவனார், “ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும்” என்று குறிப்பிடுகிறார்.
பிரபஞ்சத்துக்குக் காரணமான ஐம்பேரியற்கையான நிலம், நீர், தீ, வளி (காற்று), விசும்பு (ஆகாயம்) ஆகியவற்றைப் படைத்தவனாக சிவபெருமானை புராணங்கள் போற்றுகின்றன. தமிழில் இதனை ஐம்பெரும்பூதங்கள் என்று கூறுவர். இந்த ஐம்பூதங்களின் தலைவன் என்பதனால் சிவபெருமான், பூதநாத், பூதேஷ் என்று வடக்கிலே அழைக்கப்படுகிறார். இதே கருத்தை மதுரைக் காஞ்சியில் புலவர் மாங்குடி மருதனார் “நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய மழு வாள் நெடியோன் தலைவன் ஆக” என்று குறிப்பிடுகிறார். ஐம்பூதங்களை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிய, மழு (கோடரி), வாள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய, நெடிய உருவம் படைத்த சிவபெருமான் உலகின் தலைவனாக இருக்கிறார் என்று இதற்குப் பொருள்.
பாற்கடலைக் கடைந்தபோது அமுதத்துக்கு முன் தோன்றிய கரிய நிற ஆலகாலப் பெருவிஷத்தைத் தானே அருந்தி, உலக உயிர்களைக் காத்த தியாகராஜர் சிவபெருமான் என்று புராணங்கள் போற்றுகின்றன. இதனைச் சுட்டிக்காட்டும் வகையில், மலைபடுகடாம் எனப்படும் கூத்தர் ஆற்றுப்படையில் அதன் ஆசிரியர் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், சிவபெருமானை காரி உண்டிக் கடவுள் என்று புகழ்கிறார்.
சிவபெருமான் தான் அருந்திய விஷத்தை தனது தொண்டைப் பகுதியிலேயே தேக்கியதால், அவரது கழுத்து நீலநிறத்தில் ஒளிர்வதாக (நீலகண்டன்) புராணங்கள் வர்ணிக்கின்றன. இதே காரணத்தால், சிவபெருமானை புறநானூற்றுப் பாடல் ஒன்று மணிமிடற்றோன் என்று போற்றுகிறது. (பாடல் எண் 56). இந்தப் புராணச் சம்பவத்தையும் சிவபெருமான் திரிபுரம் எரித்த மற்றொரு சம்பவத்தையும் இணைத்து நினைவுகூர்கிறது, மதுரை மருதன் இளநாகனார் பாடிய மற்றொரு புறநானூற்றுப் பாடல் (எண் 55):
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
பாண்டியன் நன்மாறனைப் புகழ்ந்து பாடிய இப்பாடலில், அரக்கர்கள் அந்தரத்தில் அமைத்திருந்த மூன்று கோட்டைகளை (திரிபுரங்களை) மேரு (இமய) மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பெரிய பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே கணையால் எரித்துச் சாம்பலாக்கி அமரர்களுக்கு வெற்றியைத் தந்தார், கழுத்துப்பகுதியில் நீலநிறக் கறை கொண்ட அண்ணலாகிய சிவபெருமான் என்று போற்றுகிறார் புலவர். அத்துடன், பிறை நிலா சூடிய (சந்திரசேகரர்) சிவபெருமானுக்குச் சிறப்பாக விளங்குகின்ற நெற்றிக்
கண்ணைப்போல (முக்கண்ணனார்) வேந்தர்களிலே சிறப்பானவனாக பாண்டியன் நன்மாறன் விளங்குகிறான் என்று புலவர் புகழ்ந்துரைக்கிறார்.
இதே கருத்துகளை பெண்பாற்புலவர் ஔவையார், மன்னன் அதியமான் அஞ்சியைப் பாராட்டும்போது பயன்படுத்துகிறார். (பாடல் எண் 91). “பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே” என்கின்றன அப்பாடல் வரிகள். நிலவைச் சூடியவனும், நீல மணி போன்று ஒளிவிடும் கழுத்தை உடையவனுமான சிவபெருமானப் போல நீ சிறப்புறுவாயாக என்று அதியமானை வாழ்த்துகிறார் ஔவையார். கலித்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய புலவர் நல் அந்துவனார் பாடலிலும் சிவபெருமானின் திரிபுர கனம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிவுப் புதையலான பல்வேறு வேதங்களை அந்தணர்களுக்கு உரைத்த சிவபெருமான், ஆகாய கங்கையைத் தனது சடை முடியாலே தாங்கி பூமிக்கு கொண்டு வந்தவர் (கங்காதரன்) என்றும் புலவர் புகழ்கிறார். அந்தப் பாடல் வரிகள்:
தஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
புலவர் கண்ணனாகனார் பாடிய பரிபாடலின் 5-வது பாடலிலும் திரிபுர தகனம் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில், முருகனைத் தோற்றுவித்த சிவபெருமானை அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என்றும் விண்ணோர் வேள்வி முதல்வன் என்றும் புலவர் போற்றுகிறார். இதேபோல் சிவபெருமானை உமைபாகன், கண்ணுதலான் (நெற்றிக்கண்ணன்), கங்கை கொண்டான், சடையன், சூலப்படையோன், மழுப்படையோன், கபாலி என்றும் சங்க இலக்கியங்கள் துதிக்கின்றன. கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் இதுகுறித்த ஏராளமான பதிவுகள் உள்ளன.வேதம் துதிக்கும் விஷ்ணு வேறு, சங்கத் தமிழ் உரைக்கும் மாயோன் வேறா என்பதை அடுத்த அத்தியாயத்தில் அலசுவோம்.
-தொடரும்