இமயத்தில் பிறந்த தமிழ்க் கடவுள்
தமிழர்தம் குறிஞ்சித் திணையின் கடவுளான சேயோன் வேறு, வேதத்தின் சம்ஸ்கிருத ஸ்கந்தன் வேறு என்பது நவீன திராவிடத் தமிழாய்வாளர்களின் கருத்து. இது உண்மையா? ஆராய்வோம்.குறிஞ்சி நிலம் என்பது மலைப்பகுதி ஆகும். இதன் கடவுளுக்குச் சேயோன் என ஏன் பெயர் வந்தது? சேய் என்பதற்கு குழந்தை என்றும் சிவப்பு நிறம் கொண்டது என்றும் பொருள் உண்டு. அதன்படி சேயோன் என்றால் குழந்தை வடிவினன், செந்நிறம் உடையவன் என்று பொருள். முருகப் பெருமான் சிவந்த நிறம் கொண்டவராகவும், குழந்தை வடிவம் உடையவராகவுமே உருவகப்படுத்தப்படுகிறார். மலைப் பகுதியில் காற்றின் விசை காரணமாக காய்ந்த புதர்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் அடிக்கடி தீப்பற்றிக் கொள்ளும். தீ, செந்நிறம் கொண்டது. ஆகையால் அடிக்கடி தீப்பற்றிக் கொள்ளும் நிலப் பகுதியான குறிஞ்சித் திணைக்கு சிவப்பு நிறமுடைய சேயோனைக் கடவுளாக நமது முன்னோர் வரித்துக் கொண்டனர் என்று சம்ஸ்கிருத்தை வெறுக்கின்ற தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்களது கூற்று தவறல்ல, ஆனால் வேதத்தில் குறிப்பிடப்படும் ஸ்கந்தன் வேறு என்ற கருத்துதான் தவறு.
மலைப்பகுதியில் தோன்றும் தீயின் வடிவத்தை சேயோன் என்ற தெய்வமாக பண்டைத் தமிழர்கள் எவ்விதம் உருவகப்படுத்தினார்களோ, அதே கருத்தைத்தான் வேதங்களில் மிகப் பழையதான ரிக் வேதமும் சற்றே கவித்துவத்துடன் கூறுகிறது. “ஸ்கந்தன், அக்னி தேவனின் குமாரன் என்றும், மலைக்குகைக்குள் அவனது தாயாரால் அவன் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டான்” என்றும் ரிக் வேதம் (5.2.1-3) கூறுகிறது. மலையின் இடுக்குகளான குகையில் இருந்துதானே தானே தீ தோன்றுகிறது? அதனைத்தானே தமிழர்கள் சேயோன் என்று உருவகப்படுத்தினார்கள்? அதையேதான் அக்னியின் மகன் ஸ்கந்தன் என்றும், தாயாரால் அவன் குகைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளான் என்றும் ரிக் வேதம் வர்ணிக்கிறது. மேலும் அக்னி, மருத் எனப்படும் புயற்காற்று ஆகியவை ருத்ரனின் (சிவபெருமானின்) அம்சம் என்றும் ரிக் வேதம் கூறுகிறது.
சேயோனும் சிவனும் ஒன்றுதான். சிவன் என்பதற்கும் சிவந்த நிறமுடையவன் என்றே பொருள் என்பது சில தமிழறிஞர்களின் வாதம். இதைத்தானே வேதமும் கூறுகிறது! சிவன் அக்னிப்பிழம்பான பெரும் தீ, ஸ்கந்தன் அதில் இருந்து தோன்றிய குறுந்தீ. இதனைத்தான் பிற்காலப் புராணங்களும் தமிழ் இலக்கியங்களும் சிவபெருமானின் மைந்தன் ஸ்கந்தப் பெருமான் (முருகப் பெருமான்) என்று வர்ணிக்கின்றன.எவ்வாறு சங்க காலத் தமிழில் கவித்துவமான உருவகங்களால் இயற்கையின் அம்சங்கள் கடவுளர்களாக வர்ணிக்கப்பட்டதோ, அதேபோல்தான் வேதங்களிலும் இயற்கையின் அம்சங்கள் கடவுளர்களாக வர்ணிக்கப்படுகின்றன. இதில் எங்கே இருக்கிறது வேறுபாடு? இதனை வேண்டுமென்றே பிரித்துப் பார்ப்போர் கண்களில் உள்ளதைத் தவிர! முருகப் பெருமான் குறிஞ்சிக்கு மட்டுமே உரிய குறுந்தெய்வம் அல்ல, குவலயம் முழுமைக்குமான பெருங்கடவுளும் கூட. இந்தக் கருத்தை சம்ஸ்கிருத புராணங்களும் சங்கத் தமிழ் இலக்கியங்களும் ஒத்த குரலில்தான் ஓங்கி ஒலிக்கின்றன.
அதனால்தான், மலைக் கடவுளான முருகன், நாட்டிலேயே மிக உயர்ந்த மலையான இமயமலையில் அவதரித்ததாகப் போற்றப்படுகிறான்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய (அல்லது விந்துபோல் நழுவிய) ஆறு தீப்பிழம்புகளை ஐம்பூதங்களில் ஒன்றான தீக்குரிய அக்னி பகவான் தம் கைகளிலே தாங்கிச்சென்று, இமயமலைப் பகுதியின் கைலாய மலை அருகே உள்ள தாமரைத் தடாகத்தில் விட்டதாகவும், அங்கே ஆறு குழந்தைகளாக அவதரித்து ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு, பின்னர் மலைமகளான உமையம்மை வாரியணைத்தபோது ஆறு திருமுகங்கள் கொண்ட ஒரே குழந்தையாக ஸ்கந்தன் உருவெடுத்தான் என்றும் பல்வேறு சம்ஸ்கிருதப் புராணங்கள் கூறுகின்றன. நமது சங்க இலக்கியங்கள், இந்தக் கருத்தோடு மோதாமல், அதனை ஆமோதிக்கின்றன.
நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானின் தோற்றம் மேலே கூறியவாறே உரைக்கப்படுகிறது: நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ! ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே!(253–257) இதே கருத்தை பரிபாடலும் பிரதிபலிக்கிறது. பரிபாடல் நூலில், கடுவன் இளவெயினனார் என்ற புலவர் பாடிய பாடலொன்றில், ஒழுக்கசீலர்களான ஏழு முனிவர்களின் (சப்தரிஷிகளின்) மனைவியரில் வசிட்டரின் மனைவியான சாலினி (அருந்ததி) தவிர இதர ஆறு பத்தினிப் பெண்களும் சிவபெருமானின் கருவான முருகனைச் சுமந்து பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதே போன்ற கருத்து, மகாபாரதத்தின் வனபர்வத்திலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இங்கே மற்றொரு கருத்தையும் நாம் நோக்க வேண்டும். சப்தரிஷிகளும், அவர்களின் பத்தினிகளான கார்த்திகைப் பெண்களும் வானில் உள்ள நட்சத்திரங்கள். முருகப் பெருமானின் அவதாரத்தையொட்டி நிகழ்ந்த வானியல் மாற்றங்களைப் பற்றி ஏதோ உருவகமாக சங்க இலக்கியங்களிலும், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகக் கருத இடமுண்டு. இதுபற்றி விரிவான ஆய்வு தேவை.
முருகப் பெருமானை தமிழ்க் கடவுள் என்று சிறப்பித்துக் கூறுவதில் தவறில்லை, அதேநேரத்தில் கந்தன் பாரதம் முழுமைக்குமான பொதுக்கடவுள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். முருகப் பெருமான் உலகைக் காக்கும் முழுமுதற் கடவுள் என்றே குறுந்தொகை (பெருந்தேவனார் பாடிய காப்புச் செய்யுள்) கூறுகிறது. “அஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே” என்கிறார் புலவர். ஒளிபொருந்திய நீண்ட வேலையும், சேவல் கொடியையும் ஏந்தியுள்ள முருகன் காப்பதன் காரணமாக இவ்வுலகம் நலமாக இருக்கிறது என்பது இதன் பொருள்.பரிபாடலில் புலவர் நல்அந்துவனார் பாடிய பாடலொன்று,“பரங்குன்று இமயக்குன்று நிகர்க்கும்” என்கிறது. அப்பாடலில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் அவர் அவதரித்த இமயமலையின் கைலாயக் குன்றுக்கும், அங்குள்ள குளம் இமயமலைக் குளத்துக்கும் நிகரானது எனக் கூறப்பட்டுள்ளது.
இளங்கோ அடிகளின் சமண காவியமான சிலப்பதிகாரத்திலும் முருகன், “ஆல்அமர் செல்வன் புதல்வன்” அதாவது ஆலமரத்தின் அடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் மகன் என்று வர்ணிக்கப்படுகிறான். அடுத்ததாக, சிவபெருமான் பற்றி சம்ஸ்கிருதப் புராணங் கள் கூறும் கருத்துகளை நமது சங்கத் தமிழ் இலக்கியங்கள் ஏற்கின்றவா என்பது பற்றிப் பார்ப்போம்.
-தொடரும்