பத்ம விருதுகள் 2022

டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், சுவாமி சிவானந்தா, மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், குருமித் பாவா, சந்திரசேகரன், தேவேந்திர ஜஜாரியா, ரஷித் கான், டாக்டர் சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகத்தை சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், ஷெனாய் இசை கலைஞர் பீலேஷ் பஜாந்த்ரி, கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், சதிராட்ட கலைஞர் முத்து கண்ணம்மாள் ஆகிய 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

சுவாமி சிவானந்தா

குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் 126 வயதான சுவாமி சிவனந்தா. இவர் வாரணாசியில் வசித்து வருபவர். பத்மஸ்ரீ விருது வாங்க வந்த அவரின் பணிவினை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. பாரதப் பண்பாட்டின் இலக்கணமாக திகழும் இவரின் இவர் கால்கள் படாத நாடே இல்லை எனும் அளவில் பயணம் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலக இன்பங்களைத் துறந்து, ஆன்மீகத்தில் மக்களை வழிநடத்தும் சுவாமி சிவானந்தா ஆகஸ்ட் 8, 1896ல் பிறந்துள்ளார். மிக அழகாக, சகஜமாக ஆங்கிலம் பேசும் இவர், தான் பணம் சம்பாதிக்க பிறக்கவில்லை இறைவனை பற்றிய அறிவை அடையவே பிறந்திருக்கிறேன் என்கிறார். இன்றளவும் உடலின் அனைத்து பாகங்களும் சீராக வேலை செய்கின்றன. நன்றாக யோகா செய்கிறார். அவரது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, உடலுறவில் இருந்து விலகியதன் காரணமாகவும், மசாலாப் பொருள்களைத் தவிர்த்து, தினமும் யோகாசனங்களை செய்து வருவதாலும், தன்னை ஒரு பிடில் போலப் பொருத்திக் கொள்ள முடிகிறது என கூறினார். உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது. அவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், தொடர்ந்து யோகா செய்ய வேண்டும், எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என அறிவுரை கூறும் இவரது பழக்கவழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானதாக எளிமையானதாக இருக்கிறது. தரையில் போடப்பட்ட பாயில் தூங்குகிறார், மரத்தாலான தலையணையைப் பயன்படுத்துகிறார். இப்படி, ஆசைகளற்ற மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழும் இவர், நான் உலகில் உள்ள மிகவும் சந்தோஷமான மனிதன் என கூறுகிறார். மிகப்பெரிய சனாதனவாதியான இவர், தனது வாழ்க்கை முழுவதும் தொழு நோயாளிகளுக்கும் நலிந்த பிரிவினருக்கு சேவை செய்துள்ளார்.