மலக்குழி மரணங்கள் விவகாரத்தில் ஆளும் தி.மு.கவை விமர்சிக்க பயந்த திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை கண்டித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தவும், அம்மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக சாதாரண மனிதர்களுக்கு பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையை செய்து மரணத்தை தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் சொல்லப்பட்ட படைப்பு சுதந்திரம் தான் விடுதலை சிகப்பியின் கவிதை என்றும், அதை திசை மாற்றி மதப்பிரச்சினையாக உருமாற்றுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் பா.ரஞ்சித். கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தில் 52 பேர் மலக்குழியில் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் இந்த பணியினை மனிதர்கள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பதோடு சட்ட விரோதமும் கூட. ஆனாலும், இந்த அவல நிலை நீடிக்க காரணம் ஆண்டவர் ராமரா? ஆளும் அரசா? ஆள்பவரை விமர்சிக்க பயந்து கொண்டு ஆண்டவரை விமர்சிப்பது ஏன் என்பது தான் கேள்வி. எந்த சாதியாக இருந்தாலும் இந்த பணியை செய்யக் கூடாது எனும் நிலையில் அந்தணரை மட்டும் அழைப்பது ஏன்? அந்தணரை விமர்சித்தால் வாய் மூடி மெளனமாக இருப்பர் என்பதால் தானே? சட்டத்தை செயல்படுத்தாத ஆளும் கட்சியின் தலைவர்களின், அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க அச்சப்படும் படைப்பு சுதந்திரம், கடவுளின் கவனத்தை ஈர்க்கிறேன் என்று கவிதை பாடுவது அந்த கடவுளின் மீதான வெறுப்பினால் தானே? கடவுள்கள் பீடி பிடித்து கொண்டே வந்தனர் என்று குறிப்பிட்டு, இதை மதப் பிரச்சினையாக, ஹிந்து மதத்தின் மீதான வெறுப்பாக மடை மாற்றியது விடுதலை சிகப்பி தானேயன்றி, வேறு யாரும் அல்ல என்பதை பா. ரஞ்சித் புரிந்து கொள்ள வேண்டும். சமூக நிலையை சுட்டிக்காட்டும் இந்த அக்கறை, வேங்கை வயலில் ஒரு சமுதாயத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த கொடூர சம்பவத்தில் காணாமல் போனது ஏன்? கவனத்தை ஈர்க்காதது ஏன்? ஆளும் கட்சியின் மீதான பயம் தானே? அதே ஹிந்து ஆதிதிராவிடர்கள் பாதிக்கப்பட்ட வேங்கை வயல் விவகாரத்தில் படைப்பு சுதந்திரத்தை காற்றில் பறக்க விட்ட பா.ரஞ்சித் தற்போது விடுதலை சிகப்பி ஹிந்து ஆதி திராவிடர் என்று வக்காலத்து வாங்குவது சந்தர்ப்பவாதம் தானே?” என கேட்டுள்ளார்.