கேரளாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானக பி.சி.சாக்கோ, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கேரள காங்கிரஸ் கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கிறது. இதை மேலிடம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் இணைந்தபோது இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை. நேர்மையான காங்கிரஸ்காரனாக இருப்பது கடினம். கேரள சட்டசபை வேட்பாளர்கள் தேர்வு குழுவில் நானும் இருந்தேன். ஆனால், உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா போன்றோரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வெறுப்பு இல்லை. கோஷ்டி அரசியல் கட்சியின் வெற்றியைப் பாதிக்கும். இது குறித்து தலைமையிடம் பல முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டேன். என் ராஜினாமா கடிதத்தை, கட்சித் தலைவர் சோனியாவுக்கு அனுப்பிவிட்டேன்’ என தெரிவித்தார்.