சென்னையைச் சேர்ந்த தங்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த பாகன் உள்ளிட்டோர், மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், தி.மு.க முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, 81 கோடி ரூபாய் செலவில் மெரினா பகுதியில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக மீனவர்களின் கருத்தை தமிழக அரசு கேட்கவில்லை. செயற்கையாக பிரம்மாண்டமான பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைப்பது என்பது இயற்கைக்கு முற்றிலும் எதிரானது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த சின்னம் அமையவுள்ள இடம், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதால் கடல் வளமும் கண்டிப்பாக பாதிப்படையும். இதையெல்லாம் அறிந்திருந்தும் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தடையின்றி அனுமதி வழங்கியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கருணாநிதி நினைவிடத்தில் ரூ. 80 லட்சம் செலவில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கருணாநிதி நினைவிடத்திற்கு உள்ளே 40 சென்ட் நிலத்தில் 1978 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இதில், பாதி கட்டுமானம் தரைக்கு கீழ் இருக்கும் வகையில் இது அமைக்கப்படவுள்ளது.