மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 7 மே 2023 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் பஜ்ரங்கி. நான் பஜ்ரங் தளத்தை ஆதரிக்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம்” என பதிவிட்டிருந்தார். மேலும், பஜ்ரங்கிகள் அனைவரும் அந்த படத்தை தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்கவும் கோரியிருந்தார். ஆனால், அவர் அதை இடுகையிட்டவுடன், பா.ஜ.க எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்குக்கு எதிரான போராட்டங்களில் மல்யுத்த வீரர்களை அதுவரை ஆதரித்த இடதுசாரிகள், தாராளவாதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் எல்லோரும், பஜ்ரங் புனியாவை விமர்சிக்கத் தொடங்கினர். அவரை ஒரு மதவெறியர் என்று அழைத்தனர். இது அவர்களின் ஹிந்து மத விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தியதுடன் அவர்கள் இந்த போராட்டத்தை இதுவரை ஆதரித்து வந்த நோக்கத்தின் பின்னணியையும் வெட்ட வெளிச்சமாக்கியது. இந்த சூழலில், பஜ்ரங் புனியா தனது இடுகையை நீக்கிவிட்டார். பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் முன்னணி மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியாவும் ஒருவர். இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், விவசாயிகள் குழுக்கள் போன்ற பலரும் இணைந்துள்ளனர். இது, இந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன, அவர்கள் இந்த போராட்டத்தை எப்படி கொண்டு செல்ல முயல்கின்றனர், இதன் பின்னணியில் எந்தெந்த சக்திகள் செயல்படுகின்றன, அவற்றின் நோக்கமென்ன, அவர்கள் இதில் அடைய நினைக்கும் ஆதாயமென்ன என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.