சர்வதேச நிறுவன தலைவர்களின் கருத்து

கடந்த சில மாதங்களாகவே பொருளாதார மந்த நிலை குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. இது பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உக்ரைன் ரஷ்ய போர், சீனாவில் நிலவும் குழப்பங்கள், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணிகள் இதனை மேலும் ஊக்குவிக்கின்றன. இப்படி, உலகளாவிய பொருளாதார மந்த நிலை (ரெஷஷன்) குறித்து மக்கள் அனைவரும் பயந்து வரும் வேலையில், இது குறித்த சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களின் கருத்து என்ன என்பது குறித்து KPMG 2022 CEO Outlook ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 12 மாதங்களில் பொருளாதார மந்த நிலை வரலாம் என 86 சதவீத தலைமை செயல் அதிகாரிகள் நம்புகின்றனர். அதில் 58 சதவீதம் பேர் இது பயப்படும் அளவுக்கு இல்லாமல் லேசனாகதாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய மீட்சி கடினமாக இருக்கும், இது நிறுவனங்களின் வருவாயில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என பெரும்பாலான உயர் நிர்வாகிகள் கருதுகின்றனர். 73 சதவீத தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்த மந்த நிலையையடுத்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். எனினும் 75 சதவீதத்தினர் மந்த நிலைக்கு பிந்தைய வளர்ச்சி சற்று கடினமாக இருக்கும் என கருதுகின்றனர்’ என தெரிவித்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனை, கால நிலை மாற்றம் என அனைத்தும் உலக பொருளாதாரத்தை மோசமடைய செய்துள்ளது. உலகப் பொருளாதாரம் இருண்டு விட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மந்த மடைந்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்றுமதிக்கான தேவை குறைந்து வருகிறது’ என்று கூறியுள்ளார். அதற்கேற்ப, ஐ.எம்.எப் 2023ம் ஆண்டில் உலகின் வளர்ச்சி விகிதத்தை குறைத்து மறுமதிப்பீடு செய்துள்ளது. உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ், சமீபத்தில் சர்வதேச வளர்ச்சி விகிதம் மெதுவாக உள்ளது. இது இன்னும் குறையலாம். மேலும் பல நாடுகள் பொருளாதார மந்த நிலைக்குள் நுழையலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.