மூன்றில் ஒருவர் நடுத்தர குடும்பத்தினர்

பாரதத்தின் நுகர்வோர் பொருளாதாரம் மீதான மக்கள் ஆராய்ச்சி (பிரைஸ்) என்ற அமைப்பின் சார்பில், ‘பாரதத்தின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி’ குறித்த ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1994 முதல் 2021 வரை பாரத மக்களின் பொருளாதார நிலை குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. வருமான அடிப்படையில் மக்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதில், குறைந்தபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.25 லட்சத்துக்குக் கீழ் உள்ளவர்கள் மிகவும் வறுமையானவர்கள் என்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் குடும்ப ஆண்டு வருவாய் ஈட்டுவோர் நடுத்தர பிரிவு மக்கள் என்றும் அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு மேல் குடும்ப வருமானம் கொண்டவர்கள் சூப்பர் பணக்காரர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். இதன்படி, 1994-ல் 98 ஆயிரமாக இருந்த சூப்பர் பணக்கார குடும்பங்கள் எண்ணிக்கை, 2021ல் 18 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 6.4 லட்சத்துடன் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக 1.81 லட்சம் பேருடன் டெல்லியும் 1.41 லட்சம் பேருடன் குஜராத்தும் 1.37 லட்சம் பேருடன் தமிழகமும் இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2004ல் நடுத்தர பிரிவு மக்கள் எண்ணிக்கை 14 சதவீதமாக இருந்தது. இது தற்போது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்படி, நாட்டு மக்களில் மூன்றில் ஒருவர் நடுத்தர பிரிவில் உள்ளனர். ரூ.1.25 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருவாய் ஈட்டும் 10ல் 5 பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். ரூ. 5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டும் 10ல் மூன்று குடும்பத்தினர் கார் வைத்துள்ளனர். ரூ. 30 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் பணக்கார குடும்பத்தினர் அனைவரும் கார் வைத்துள்ளனர். பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளவர்களின் குடும்பத்தில் தோராயமாக 3 கார்கள் உள்ளன. என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினால், 2047ம் ஆண்டில், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் நடுத்தர பிரிவு மக்கள் பங்கு 63 சதவீதமாக அதிகரிக்கும். பெரும் பணக்காரர்களின் எண்ணிகையும் கணிசமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.