ஆம் ஆத்மி கட்சியினரிடம் ஒருகோடி பறிமுதல்

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மதுபான கொள்கையில், சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதனையடுத்து, சி.பி.ஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் விஜய் நாயர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். இதில், தெலுங்கு நாளிதழ், டிவி நிறுவன இயக்குனர், பஞ்சாப் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத ஒரு கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.