ஒடிஸா ரயில் விபத்து: ஊழியர்கள் 5 பேரிடம் தீவிர விசாரணை

ஒடிஸா மாநிலம், பாலசோர் மாவட்டம், பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2- ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நிகழ்ந்தது. இதில் 288 பயணிகள் உயிரிழந்தனர். 1,200 பேர் காயமடைந்தனர். ரயில்களுக்கு சிக்னல் வழங்கு வதில் ஏற்பட்ட ‘குறுக்கீட்டால்’ லூப் லைனில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோர மண்டல் விரைவு ரயில் மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு பாஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள ரிலே அறைக்குள் கட்டுப்பாடின்றி எவரும் செல்லக் கூடிய வகையில் இருந்ததே முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, ரயில்வே சார்பில் துறை ரீதியிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. ரயில்வே பாது காப்பு ஆணையர் இந்த விசார ணையை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறுகையில், ‘விபத்து தொடர் பாக பாஹாநகா பஜார் ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில்களுக்கு சிக்னல் வழங்கும் பணியில் ஈடுபட்ட 4 ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ரயில்களுக்கு சிக்னல் வழங்குவ தில் ஏற்பட்ட கோளாறு கவனக் குறைவால் ஏற்பட்டதா அல்லது சதியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் சமர்ப்பிப்பார் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில், ஊழியர்கள் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.