தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மோரவள்ளியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில்,’கோயிலுக்கு சொந்தமாக 2.76 ஹெக்டேர் நிலம் உள்ளது.இதை தனி நபர்கள் பலர் ஆக்கிரமித்து உள்ளனர்.அங்கு கட்டடங்கள் கட்டி வருகின்றனர்.கோயில் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.இது தொடர்பாக கடந்த 2014ல் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.மேலும் முறைகேட்டை அம்பலப்படுத்தியதால் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.நிலத்தை மீட்டு பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.இவ்வழக்கில், ஏல நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து, கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.