நாற்பது கோடிக்கும் அதிகமானோர் பாரதத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஜனவரி அன்று வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதன் மூலம் தனிநபர் உரையாடல்களையும் பார்க்க முடியும் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், தாங்களே நினைத்தால் கூட வாட்ஸ்அப் செய்திகளை படிக்க முடியாது என நிறுவனம் விளக்கமளித்தது. மக்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்ட அதன் புதிய தனியுரிமை கொள்கைகள் கடந்த மே 15 முதல் நடைமுறைக்கு வந்தது. இவற்றை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப்பின் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப்பெறும்படி வாட்ஸ்அப்பிடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதில் ‘பாரதத்தில் பலர் அன்றாட வாழ்க்கையில் தொடர்புகொள்ளும் சாதனமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். நியாயமற்ற விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் பயனர்கள் மீது சுமத்துவது கூடாது. இது ஒரு பொறுப்பற்றத்தனம். ஐரோப்பிய பயனர்களுடன் ஒப்பிடுகையில், நிபந்தனைகள் இந்திய பயனர்களுக்கு எதிராக, பாகுபாடாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 25க்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.