டுவிட்டருக்கு நோட்டீஸ்

டுவிட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அரசு, வரும் ஜூலை 4ம் தேதிக்குள் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அரசு உத்தரவுகளுக்கும் இணங்க கடைசி வாய்ப்பை அளித்துள்ளது. டுவிட்டர் அரசின் ஐ.டி சட்ட விதிகளை தொடர்ந்து மீறினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இடைநிலையாளர் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும், அதாவது அதன் தளத்தில் வெளியிடப்படும் அனைத்து கருத்துக்களுக்கும் அந்த நிறுவனமே பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் பலமுறை டுவிட்டருக்கு அனுப்பப்பட்டது. எனினும், அது அவற்றிற்கு இணங்கவில்லை. எனவே, இறுதி அறிவிப்பாக தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ளடக்கத்தை அகற்றும் அறிவிப்புகளுக்கு இணங்காதது குறித்து மத்திய அரசு டுவிட்டரை எச்சரிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த மே 2021ல், இதேபோன்ற அறிவிப்பை  மத்திய அரசு வெளியிட்டது. டுவிட்டர், பாரதத்தில் வசிக்கும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி, குடியுரிமை தலைமை இணக்க அதிகாரி மற்றும் நோடல் தொடர்பு அதிகாரியை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.