கடந்த வாரத்தில் பிஹாரில் உள்ள பக்ஸர் மாவட்டம், உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா, பாராவுளி பகுதி வழியாகச் செல்லும் கங்கை ஆற்றில் 50க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. இந்த உடல்களை இரு மாநிலங்களின் அதிகாரிகளும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர். உத்தரப்பிரதேசம் வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களில் இருந்து இந்த உடல்கள் வந்திருக்கலாம் என்று பிஹார் அதிகாரிகள் சந்தேகித்தனர். அது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்தது தொடர்பாக பிஹார், உ.பி. மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. அதில் ‘புனிதமான கங்கை நதியில் பாதி எரிந்த நிலையில் உடல்களையும், மிக மோசமான நிலையில் உள்ள சடலங்களையும் தள்ளிவிடுவதைத் தடுக்கவும், மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை பிஹார், உ.பி. அரசுகள் ஏற்படுத்த வேண்டும். இது, கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் திட்டத்துக்கும், விதிமுறைகளுக்கும் எதிரானது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.