பணம், பொருள் கொடுத்து, ஏமாற்றி, பொய் சொல்லி, ஆசை வார்த்தைகளைக் கூறி, வசியம் செய்து, கட்டாயப்படுத்தி, லவ்ஜிஹாத் என்ற போலி காதல் மூலம் என பல்வேறு விதங்களில் மதமாற்ற மோசடிகள் தேசமெங்கும் நடைபெறுகின்றன. கட்டாய மதமாற்றம் தேசத்திற்கு ஆபத்து என உச்ச நீதிமன்றமே கருத்துத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தேசம் தழுவிய மதமாற்றத்தடை சட்டம் வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இத்தகைய மதமாற்ற மோசடிகளை தடுக்க, உத்தரப் பிரதேசம், மத்திப்ய பிரதேசம், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளன. ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு முன் அல்லது மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என இந்த சட்டங்கள் கூறுகின்றன. கிறிஸ்தவ மிஷனரிகள், முஸ்லிம் மதவாத அமைப்புகள் எல்லாம் இதனால் பாதிக்கப்பட்டன. இந்த சட்டங்களை எதிர்த்து அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டம் அரசியல் சாசனம் வழங்கி உள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் குறித்து பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.