கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு யாரும் அச்சுறுத்தல் விடுக்க காங்கிரஸ் அனுமதிக்காது” என்று தேச பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசினார். இந்தத் தகவல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து சோனியவுக்கு நாடெங்கிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழலில், சோனியாகாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான பா.ஜ.க குழு, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தது. அதில் “பாரதத்தின் மிக முக்கியமான உறுப்பு மாநிலம் கர்நாடகா. ஒரு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாக்க அழைப்பு விடுப்பது என்பது, பிரிவினைக்கு அழைப்பு விடுவதாகவே அர்த்தம். அத்தகைய அழைப்பு ஆபத்தான, மிகக்கொடிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதால், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதற்காக, சோனியாகாந்தியின் பேச்சு இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தின் பதிவையும் பா.ஜ.க சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம், இந்த புகார் தொடர்பாக சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.