பிரதமர் மோடி குறித்த பி.பி.சியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தொடர்பாக ஜார்க்கண்ட் பா.ஜ.க தலைவர் பினய் குமார் சிங் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, டெல்லி நீதிமன்றம் பிபிசி, விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் இணையக் காப்பகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. ரோகினி நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி ருச்சிகா சிங்லா, மே 11 அன்று இம்மனு மீதான விசாரணைக்கு பட்டியலிட்டார். வழக்குக்கு எழுத்துப்பூர்வ பதில்களை தாக்கல் செய்ய பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் தொலைக்காட்சி குழு உறுப்பினரான பினய் குமார் சிங், தாக்கல் செய்த இந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு எதிராக ‘இந்தியா: மோடி கேள்வி’ என்று பி.பி.சி வெளியிட்ட இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அதன் மில்லியன் கணக்கான அந்த அமைப்புகளை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை இழிவுபடுத்தும் தீய நோக்கத்தால் தூண்டப்பட்டவை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அமைப்புகள் மதிப்புமிக்கவை. ஆனால், இந்த ஆவணப்படம் சரிபார்க்கப்படாத மற்றும் போலியான கூற்றுக்களை வெளியிட்டு இந்த அமைப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆவணப்படத்தின் உண்மையன நோக்கம், 2024 தேர்தலுக்கு முன்பாக மோடியை அரக்கத்தனமாக சித்தரிப்பதும் அவதூறு செய்வதும் தான். மத்திய அரசால் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகள் விக்கிபீடியாவிலும் இணையக் காப்பகத்திலும் இன்னும் இருப்பதைக் கண்டுபிடித்ததாக கூறினார். விக்கிபீடியா ஆவணப்படம் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறது, ஆனால் ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகளுக்கும் இணைப்புகளை பொது மக்களுக்கு வழங்குகிறது என்று கூறி அவற்றை நீக்குவதுடன் 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என கூறியுள்ளார்.