செயல்வடிவம் பெறுமா அறிவிப்பு

சென்னை அடையாறில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ‘பொதுவெளியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. இது, மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படும்’ என்று கூறினார். ஆனால், டாஸ்மாக்கில் இதனை எப்படி அரசு கண்காணிக்கும், யார் கண்காணிப்பார்கள், தடுப்பூசி செலுத்தாமல் வருவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பதையும் அவர் விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது வழக்கம்போல தி.மு.க அரசின் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்குமா அல்லது நடைமுறைபடுத்தப்படுமா? முன்பு மது அருந்துவோர் வசதிக்காக தடுப்பூசி முகாம் ஞாயிற்று கிழமைக்கு பதிலாக சனிக்கிழமைகளில் நடத்தப்படும் என அறிவித்ததை தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளார் அமைச்சர். அரசுக்கு பெரிய வருமானத்தைத் தரும் மது அருந்துவோர் மீது தி.மு.க அரசு காட்டும் அக்கறையை நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.