பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை; மாயாவதி விளக்கம்

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘பொது சிவில் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியும், எதிர்க்கட்சிகள் வாக்குவங்கி அரசியல் நடத்துகின்றன’ என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து, தேசிய அளவில் பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் மீண்டும் அதிகரித்தது.

மேலும், சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளைக் கேட்டது. இப்போது, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்டவற்றில் வெவ்வேறு மதங்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. இவற்றை மாற்றி அனைவருக்கும் ஒரே போன்ற சட்டத்தை கொண்டு வருவதே பொது சிவில் சட்டமாகும்.

இந்நிலையில் இதுதொடர்பாக லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி கூறியதாவது: பொது சிவில் சட்டம் என்பது அனைவரையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதனைத் திணிப்பதற்கு எவ்வித வழிவகையும் கூறப்படவில்லை. அச்சட்டம் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒருமித்த கருத்துடன் அதனை அமல்படுத்த வேண்டும். எங்கள் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானதல்ல. அதனை பாஜக அமல்படுத்தும் முறையைத்தான் எதிர்க்கிறோம் என்றார்.