நாக்பூரில் ஒரு நாளிதழின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஹிந்து மதம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு’ என்ற சொற்பொழிவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தரம் சன்சத் நிகழ்ச்சி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “ஹிந்துத்வா என்பது ‘இசம்’ அல்ல, ஹிந்துத்துவத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஹிந்துத்துவா. இது முதலில் குருநானக் தேவ் அவர்களால் குறிப்பிடப்பட்டது. இது ராமாயணம், மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஹிந்து என்பது வரையறுக்கப்பட்ட விஷயம் அல்ல, அது மாறும் அனுபவத்துடன் தொடர்ந்து மாறுகிறது. தனிப்பட்ட ஆதாயம் அல்லது பகைமையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படும் அறிக்கைகள் ஹிந்துத்துவாவை பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை. ஆர்.எஸ்.எஸ் அல்லது உண்மையில் ஹிந்துத்துவாவைப் பின்பற்றுபவர்கள் இந்த தவறான அர்த்தங்களை நம்புவதில்லை. சமநிலை, மனசாட்சி, அனைவரிடமும் உள்ள பந்தம் ஆகியவையே ஹிந்துத்துவாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தரம் சன்சத் நிகழ்வுகளில் வெளிவந்தவை அனைத்தும் ஹிந்து வார்த்தைகளோ, ஹிந்து செயல்களோ, ஹிந்து மனமோ அல்ல’ என கூறினார்.
முன்னதாக, ஹரித்வார், ராய்ப்பூர், டெல்லி பகுதிகளில் நடைபெற்ற தரம் சன்சத் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசிய சில மதத் தலைவர்களின் ஆவேச பேச்சுகள் சர்ச்சையை கிளப்பின. அவை, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாகக் கூறப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.