எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல

கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று சென்று வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த விபத்து நடந்தபிறகு, அது வெடிகுண்டு என்றும் தற்கொலைப்படைத் தாக்குதல் என்றும் தெரிந்தபிறகு காவல்துறையினர் துணிவாக இந்த இடத்தில் அனைத்தியும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காத வண்ணம், தங்கள் உயிரை பணயம் வைத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசை தொந்தரவு செய்வது பா.ஜ.கவின் நோக்கமல்ல, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, அது இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்குதான். முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும் தவறுகள் நடந்துள்ளது. தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது.சதிகாரர்கள் நம்மை ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று மதத்தால் பிளவுபடுத்த பார்ததால்கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள். அது மிகப்பெரிய விஷயம். இதுபோன்ற தாக்குதல் மூலமாக மதத்தை வைத்து கோவையைப் பிரித்து சூழ்ச்சி செய்து அதன்மூலமாக மக்களின் ஒற்றுமை உணர்வை குறைப்பதே இந்த முயற்சி. பா.ஜ.க, இதில் சம்பந்தப்பட்டவர்களை முதல் நாளில் இருந்தே குற்றவாளி என்றுதான் சொல்லிவந்தது. அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் பூசவில்லை. சனாதன தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த ஒரு மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்காது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று வேறுபடுத்தி பார்த்தாலே அது சனாதன தர்மத்துக்கு எதிரானது. அனைவரையும் அரவணைக்கும் கடமை நமக்குள்ளது. இங்கிருக்கும் முஸ்லிம் பெரியவர்கள்கூட 23ம் தேதி நிகழ்வுக்குப் பிறகு மிக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகள் தவறு என முஸ்லிம் குருமார்களே கூறுகின்றனர். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்கூட வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. அது தவறான முன் உதாரணம். எனவே மதகுருமார்கள், இளைஞர்கள் யாராவது தவறான வழியில் சென்றால் எடுத்துச்சொல்வது நம்முடைய கடமை. அனைத்து மதங்களும், அமைதியை, ஆன்மிகத்தை தான் சொல்கின்றன. எந்தவொரு மதத்திற்கும் பா.ஜ.கவோ, பா.ஜ.க தொண்டர்களோ, தலைவர்களோ எதிரானவர்கள் கிடையாது” என்று கூறினார்.மேலும், பிளவு பட்டு கிடக்கும் அ.தி.மு.கவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தது குறித்து பேசிய அண்ணாமலை, அ.தி.முக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது. மூன்றாவது இடத்தில் பா.ஜ.க உள்ளது என ஏற்றுக்கொண்டதற்கு அமைச்சர் நேருவுக்கு நன்றி என தெரிவித்தார்.