ஒற்றை ஓநாய் தாக்குதல் அல்ல

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள், தங்களது எதிரிகளை அழிக்க பின்பற்றும் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையில் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதேசமயம், இந்த பயங்கரவாத முயற்சியில் உயிரிழந்த ஜமேஷா முபின், கைது செய்யப்பட்ட அவருடன் தொடர்புடைய அப்சர்கான், முகமது அசாருதீன் உள்ளிட்டோரின் பங்களிப்பு இதில் அதிகமாக உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இதற்காக ஒத்திகை பார்த்தது, இவர்கள் அனைவரும் இணைந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள், டிரம்கள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனங்கள் ஆகியவற்றை வாங்கியது, கார் வெடிப்பு நடந்த தினத்துக்கு முந்தைய நாள் இரவு முபினின் வீட்டிலிருந்து பெரிய மூட்டை வெளியே எடுத்துச் செல்லப்பட்டது ஆகிய தகவல்களும் வெளியானது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கோவையில் நடந்த கார் வெடிவிபத்து சம்பவத்தை ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை எனக் கூறமுடியாது. ஏனெனில் இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பங்கு உள்ளது’’ என்றார்.