யாருக்கும் அதிருப்தி இல்லை: ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

மஹாராஷ்டிரா கூட்டணி அரசில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோர் இணைந்துள்ளதால், சிவசேனாவில் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை,” என, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், தன் ஆதரவாளர்களுடன், கூட்டணி அரசில் இணைந்தார். அஜித் பவார் துணை முதல்வராகவும், அவருடைய ஆதரவாளர்கள், எட்டு பேர் அமைச்சர்களாகவும் சமீபத்தில் பதவியேற்றனர்.

அஜித் பவார் தலைமையில், தேசியவாத காங்., உறுப்பினர்கள் கூட்டணி அரசில் சேர்ந்துள்ளதற்கு, சிவசேனாவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, சிவசேனா, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இது குறித்து ஏக்நாத் ஷிண்டே நேற்று கூறிஉள்ளதாவது: அஜித் பவார் கூட்டணியில் சேர்ந்துள்ளதால், சிவசேனாவில் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. சிலர் அதிருப்தியில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். அஜித் பவார் வந்துள்ளதால், கூட்டணி அரசின் பலம் அதிகரித்துள்ளது. சிவசேனா தலைமையில் இந்த அரசு தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். ”தேசியவாத காங்கிரஸ் வந்துள்ளதால், சிவசேனா வெளியேற்றப்படும் என்று கூறப்படுவது வெறும் புரட்டாகும். நாங்கள் ராஜினாமா கொடுப்பவர்கள் அல்ல; பெறுபவர்கள்,” என, சிவசேனாவைச் சேர்ந்த மாநில அமைச்சர் உதய் சாமந்த் குறிப்பிட்டு உள்ளார்.