மது குடிப்பதில் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்று அரிய சாதனை படைத்து வரும் தமிழகத்தில், தற்போது வரை டாஸ்மாக், பெரிய ஓட்டல்கள், அங்கீகரிக்கப்பட்ட பார்கள் உள்ளிட்ட மதுபானக் கூடங்களில் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கும் ஒரு புரட்சிகர முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் கூட, மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் இந்த சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழக அரசின் அரசிதழில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என இதற்கான அனுமதி கட்டணங்கள் மாறுபடுகின்றன. இதற்கான விதிமுறைகளையும் அரசு வழங்கியுள்ளது.
இதனை கண்டித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என தெரிவித்தார். இதேபோல பா.ம.க தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல கட்சியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனை சமூக ஊடக பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என தமிழக உள்துறை செயலாளர் அறிவித்தது சர்ச்சையாக மாறியதையடுத்து “திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை, திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது, விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும்” என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.