என்.எல்.சி நில எடுப்பு விவகாரம்

என்.எல்.சி. நில எடுப்பு விவகாரம் தொடர்பாக, 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாக பா.ஜ.க மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷியின் அறிவுறுத்தலுக்கு இணங்க, தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலையின் ஆலோசனைப்படி, சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள என்.எல்.சி. அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமாரை சந்தித்தேன். அப்போது, நில எடுப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு 6 அம்ச கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்து, அது சம்பந்தமாக ஆலோசித்தேன். அதற்கு, என்.எல்.சி. தலைவரும் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து நல்ல முடிவுகளை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்” என தெரிவித்துள்ளார். மேலும்,

மேலும், நான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்தியுள்ள கோரிக்கைகள்: வளையமாதேவி, கத்தாழை, கருவெட்டி, கரிமேடு, மும்முடிச் சோழகன் உள்ளிட்ட கிராமங்களுக்கு 2000ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ஐந்து லட்சம், ஆறு லட்சம், 15 லட்சம், 23 லட்சம் மற்றும் 25 லட்சம் என்கிற வேறுபாடுகளை களைந்து, சம அளவிலான இழப்பீடு தொகையாக அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் அளிக்கப்பட வேண்டும். மக்களிடம் பேசி முறையான தீர்வு எட்டப்பட்டு, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை நில ஆர்ஜித நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம் 2013ன் படி, புதிதாக நில ஆர்ஜிதம் செய்யப்படுகிற, அல்லது செய்யப்படவிருக்கிற நிலங்களுக்கு உரிய நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும். உதாரணமாக தென்குத்து, வானவிராயபுரம், கம்மாபுரம், சாத்தப்பாடி போன்ற கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்படுவதானால் மேற்கண்ட சட்டத்தின் பிரிவுகளின் படி முறையான நிவாரணத் தொகை அறிவிக்கப்பட வேண்டும்,

நெய்வேலி அப்ரண்டீஸ் படிப்பு முடித்தவர்களுக்கு 1994ம் ஆண்டில் இருந்து வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது போன்ற ஸ்கில்டு வேலைகளுக்கு அன்ஸ்கில்ட் வேலையாட்களை அமர்த்துவதன் மூலமாக என்.எல்.சி நிறுவனத்தில் விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, 1994ல் இருந்து அப்ரண்டீஸ்முடித்தவர்களுக்கு படிப்படியாக, முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நிலம் கொடுத்தவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதில் வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படாமல், பணி ஓய்வு வயது வரை வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 1956ல் இருந்து நில எடுப்பு நடத்தப்பட்ட தொப்பலிகுப்பம், வடக்குவெலூர், அம்மேரி, ஆதண்டார்கோவில், அகிலாண்ட கங்காபுரம், தாண்டவன்குப்பம், கங்கைகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நில எடுப்பின் போது கொடுக்கப்பட்ட ‘நிரந்தர வேலைவாய்ப்பு’ உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டு, ‘நிரந்தர வேலைவாய்ப்பு’ உள்ளிட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். என்.எல்.சி நிலஎடுப்பு தொடர்பாக கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களினுடைய உரிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை உண்டாக்கி அந்த குழு உடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். பா.ஜ.க, மக்கள் நலனில் மக்களோடு மக்களாக என்றைக்கும் களத்தில் நிற்கும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.