தனக்குதானே குழி பறித்துக்கொண்ட நிதீஷ் குமார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் செய்துள்ள தேவையற்ற அரசியல் குழப்பத்தால், அம்மாநிலத்தில் லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அரசியல் சூழ்ச்சியில் தோற்றது பா.ஜ.க அல்ல, முதல்வர் நிதிஷ் குமாரும் அவருக்கு வாக்களித்த பீகார் மக்களும்தான்.

2014 மக்களைவைத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து, 2013ல் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். பின்னர், லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டியுடன் கைகோர்த்தார். 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி, ஜேடி(யு), காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி அடங்கிய ‘மஹா கட்பந்தன்’ சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் ஆர்.ஜே.டி உடனான அவரது தேனிலவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். லாலு கட்சியினரின் தொடர் ஊழல்களால் 2017ல், அவர் ஆர்.ஜே.டியை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பினார். 2020 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தலை சந்தித்தது நிதிஷ் குமாரின் கட்சி ஆர்.ஜே.டியுடனான முந்தைய செயல்பாட்டின் காரணமாக 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.கவின் 74 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. எனினும் நிதீஷ் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பா.ஜ.கவுடனான அவரது உறவு மோசமடையத் துவங்கியது. நிதிஷ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்திய சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு (எல்.ஜே.பி) பா.ஜ.க தலைமை ஆதரவு கொடுத்ததாகவும் அதனால்தான் தாங்கள் குறைந்த இடங்களை பிடித்ததாகவும் நிதீஷ் குமாரும் அவரது சகாக்களும் சந்தேகித்தனர். எனினும், சிராக் பாஸ்வான் சில இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராகவும் வேட்பாளர்களை நிறுத்தியதையும் எல்.ஜே.பி வேட்பாளர்களை நிறுத்திய பல இடங்களில், நிதீஷ் கட்சி  வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தையே பெற்றதையும் பா.ஜ.க சுட்டிக்காட்டி, ஜேடி(யு) தோல்விக்கு தாங்கள் எவ்விதத்திலும் காரணமல்ல என்பதை ஆதாரபூர்வமாக விளக்கியது. மேலும், 2020 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க தனது மூத்த தலைவரும் நிதிஷ் குமாரின் நெருங்கிய நண்பருமான சுஷில் குமார் மோடியை துணை முதல்வராக நியமித்தது. இருவரும் பீகாரில் ராமர் லட்சுமணர் ஜோடி என குறிப்பிடப்பட்டனர். எனினும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கடந்த 20 மாதங்களாக, பா.ஜ.க, ஜே.டி (யு) கட்சிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களும் சில விஷயங்களில் ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். முன்னதாக, நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராக இருந்த ஜேடி(யு) தேசியத் தலைவர் ராமச்சந்திர பிரசாத் சிங்கை மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைத்தார் நிதிஷ். அவருக்கு எஃகு அமைச்சக பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால் இயல்பிலேயே சந்தேக குணம்கொண்டவரான நிதிஷ், ராமச்சந்திர பிரசாத் பா.ஜ.க தலைமையுடன் நெருங்கி வருவதாக கருதினார். இதனால், அவரது பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தபோது, ​​அவரை மாநிலங்களவைக்கு மீண்டும் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்.

இப்படி, சிறிது சிறிதாக நிதிச் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆர்.ஜே.டி கட்சியினர் இணைந்து கட்டமைத்த வதந்திகள், சதிகள் எனும் சிலந்தி வலையில் விழுந்துவிட்ட நிதிஷ், தற்போது, பா.ஜ.கவுடனான உறவை முறித்துக் கொண்டார். தனது இந்த புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம், தனது கட்சியை பிளவில் இருந்து காப்பாற்றிவிட்டதாக நம்பிக்கொண்டுள்ளார் நிதிஷ் குமார். ஆனால், மக்கள் பார்வையில் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு புகழ்பெற்ற ஆர்.ஜே.டியுடன் கைகோர்த்ததன் மூலம் தனது நம்பகத்தன்மைக்கும், மாநில மக்களுக்கும் தான் ஏற்படுத்திய நிரந்தர சேதத்தை நிதீஷ் உணரவில்லை.

மாட்டு தீவன ஊழல் முதற்கொண்டு அரசு கருவூலத்தை கொள்ளையடிக்கும் ஆர்.ஜே.டி கட்சியினரின் பல ஊழல்களும் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆயுத கலாச்சாரம், ஜாதிய வன்முறைகள் உள்ளிட்ட அக்கட்சியினரின் சட்டவிரோத செயல்பாடுகளும் அடங்கிய 15 ஆண்டுகால ஆர்.ஜே.டி’யின் ஆட்சி பீகாரின் ‘இருண்ட ஆண்டுகள்’ என்று அம்மாநில மக்களால் இன்றுவரை குறிப்பிடுகின்றனர்.

அக்காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சி, தூய்மையான நிர்வாகம், குற்றச்செயல்கள் மற்றும் மாஃபியாக்கள் மீதான ஒடுக்குமுறை, ஜாதிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி என்ற வாக்குறுதி மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் 2005ல் பீகாரில் நிதிஷ் குமார் முதல்வரானார். தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினார். நல்ல பெயரையும் பெற்றார்.

ஆனால், 2014ல் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, ஆர்.ஜே.டியுடன் கைகோர்த்தது முதல் அவரது இறங்குமுகம் துவங்கியது. இப்போது தற்போது பீகாரில் மீண்டும் ஒருமுறை பா.ஜ.கவை தூக்கி எறிந்துவிட்டு ஆர்.ஜே.டியுடன் கைகோர்த்துள்ளார் நிதிஷ். இது அவரது கட்சியின் அழிவை தீர்மானித்துள்ளது. பீகாரை மீண்டும் ஊழல், கொள்ளை, குற்றங்கள் நடக்கும் மாநிலமாக மாற்றவுள்ளது என மக்கள் கருதுகின்றனர்.

ஜேடி(யு) கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆர்.ஜே.டி சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமார் எப்பொழுதும் தன்னிடம் வைத்திருக்கும் முக்கியமான உள்துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம் போன்ற முக்கிய துறைகளை கைப்பற்ற ஆர்.ஜே.டி விரும்புகிறது. வெறும் 44 எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டுள்ள நிதிஷ் குமார், ஆர்.ஜே.டியின் அழுத்தத்தை எதிர்க்க முடியாத நிலையில் இருப்பதால், தேஜஸ்வி யாதவின் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தாக வேண்டும்.

இரண்டு முறை பா.ஜ.கவுக்கு துரோகம் இழைத்துள்ள நிதிஷ், மீண்டும் வந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படுவது சந்தேகமே. அதனால், இனி அவர், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகளை சகித்துக்கொண்டே ஆகவேண்டும். ஒருவேளை அவர்களது கூட்டணி 2025 தேர்தல்வரை நீடித்தாலும் நிதிஷின் கட்சி தற்போதைய நிலையில் இருந்து மாறி ஒரு சிறிய விளிம்புநிலைக் கட்சியாக மாறிவிடும். ஊழலற்றவர், நல்லவர் என்ற நிதிஷின் தற்போதைய பளபளப்பு முற்றிலும் தேய்ந்துவிடும். மீண்டும் ஆர்.ஜே.டியுடன் கூட்டணி வைத்து, தனது புத்திசாலித்தனமான செயலால் பா.ஜ.கவுக்கு அடி கொடுத்ததாக நிதிஷ் இன்று கருதலாம். ஆனால், பீகாரில் மீண்டும் இருண்ட காலத்தைக் கொண்டுவந்ததன் மூலம், உண்மையில் அவர் தனக்கும், தன் கட்சிக்கும் தன்னை நம்பிய மாநில மக்களுக்கும் ஒரு மரண அடியை அளித்துள்ளார் என்பதே நிதர்சனம்.

மதிமுகன்