காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாக, கடந்த மார்ச் 19ல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்திற்குள் புகுந்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு கம்பீரமாக பறந்து கொண்டிருந்த நம் நாட்டின் தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் இறக்கினர். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, அம்ரித்பாலை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, புதுடில்லி போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து, என்.ஐ.ஏ.,க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவும்படி, பொது மக்களை, என்.ஐ.ஏ., கேட்டுள்ளது. இது தொடர்பாக ஐந்து ‘வீடியோ’க்களை சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ள என்.ஐ.ஏ., அவற்றில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.