மேற்கு வங்க மாநிலம் மோமின்பூரில் கடந்த அக்டோபர் 9ம் தேதி ஹிந்துக்கள் மீது முஸ்லிம் மத வெறியர்கள் கடுமையான தாக்குதல் நடத்தினர். மயூர்பஞ்ச் பகுதியில் பல ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான இந்தக் கலவரத்தில் மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், காவல்துறை செயலற்ற நிலையில் உள்ளதால், கலவரப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட மத்திய துணை ராணுவப் படையை அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும் குற்றச் செயல்களின் தீவிரத்தை கருத்தில்கொண்டு இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்கலாமா என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த வழக்கை என்.ஐ.ஏ ஏற்றது. அக்டோபரில் வழக்கை மறுபதிவு செய்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் 17 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.