கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக தமிழக காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இதில் கைப்பற்றப்பட்ட போருட்கள், கைது செய்யப்பட்ட நபர்கள், அவர்களது பின்புலம ஆகியவை இதில் பயங்கரவாத கோணம் இருப்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர். காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், ஜமேசா முபிiனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதனிடையே, இவ்வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினாலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் கோவை காவல்துறை வசம்தான் உள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இதனையடுத்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். கோவையில் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.