ஸ்ரீனிவாசன் கொலை வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ

கேரளாவின் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தற்போது என்.ஐ.ஏ பொறுப்பேற்றுள்ளது.ஸ்ரீனிவாசன், கடந்த ஏப்ரல் 16 அன்று கேரளாவில் உள்ள மேலமுரியில் உள்ள அவரது கடையில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஸ்ரீனிவாசனின் கொலை, பி.எப்.ஐ நடத்திய திட்டமிட்ட குற்றங்களில் முதன்மையானது, ஏப்ரல் 15ம் தேதி பி.எப்.ஐ தலைவர் சுபைர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக சீனிவாசன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கேரள காவல்துறை கூறுகிறது. இந்த வழக்கில் கொலை மற்றும் சதியில் ஈடுபட்டதாக இருபதுக்கும் மேற்பட்டோரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.இந்தக் கொலைக்குப் பின்னால் சதித் திட்டம் தீட்டுவதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் சந்தேக்கிக்கின்றனர். பி.எப்.ஐ மாநிலக் குழு உறுப்பினர்கள் யாஹியா கோயா தங்கல், சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் அமீர் அலி உட்பட 44 பேர் மீது இரண்டு கட்டங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பி.எப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட்டதையடுத்து என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ முன்னாள் மாநிலச் செயலாளர் சி.ஏ ரவூப், ஸ்ரீனிவாசன் கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதனிடையே, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, கேரள காவல்துறையிடம் இருந்து வழக்கை எடுத்துக்கொண்ட என்.ஐ.ஏ இவ்வழக்கில் தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவுள்ளது. முன்னதாக, கேரள காவல்துறை இந்த வழக்கை என்.ஐ.ஏவின் கொச்சி குழுவிடம் ஒப்படைத்தது. சமீபத்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ), அதன் எதிரிகளை ஒழிக்க, அவர்களை உளவு பார்த்து தகவல்களை சேகரித்து பட்டியலை தயாரித்துப் பராமரிக்கும் ஒரு ரகசியப் பிரிவைக் கொண்டிருப்பதை கேரள காவல்துறை கண்டுபிடித்ததை அடுத்து, என்.ஐ.ஏ இந்த வழக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது என்றும் இந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தும் இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.