கொரோனா பாதித்த கடந்த 13 மாதங்கள் உலகெங்கிலும் உள்ள மனித இனத்திற்கு மிகவும் சவாலானவை. சீனாவில் தோன்றிய கொரோனா கிருமி உலகையே முடக்கிப்போட்டுள்ளது. அதற்கு எதிராக அரசுகளும் மருத்துவர்களும் போராடி வரும் வேளையில், பல்வேறு பத்திரிகைகளும் ஊடகங்களும் அவர்களின் செய்திகள், கட்டுரைகள் வாயிலாக மக்களுக்கு ஆறுதல், தைரியம் தருவதற்கு பதலாக அவர்களின் மனத்தில் பயத்தையே விதைத்துள்ளன என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பல வெளிநாட்டு பத்திரிகைகள், பாரதத்தில் எதிர்மறை செய்திகளை பரப்புவதில் அதிக முனைப்புக் காட்டியுள்ளன. பாரதத்தில் கடந்த 14 மாதங்களில் வெளியிடப்பட்ட 550க்கும் அதிகமான கட்டுரைகளை குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்தபோது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சார்ந்த மிகப்பெரிய சிறந்த பத்திரிகைகள் என கூறப்படும் வெளியீடுகளில் வந்த கட்டுரைகள் அதிர்ச்சியூட்டும் முடிவுகளை அளித்துள்ளது.
அவற்றில் வெளியான கட்டுரைகளில் 76 சதவீதம் பயம், அவநம்பிக்கை, மன உளைச்சல், பதட்டத்தை ஏற்படுத்துவது, எதிர்மறை விமர்சனம் என்ற வகையிலேயே இருந்துள்ளன. பி.பி.சி, தி எகனாமிஸ்ட், தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் ஆகிய 6 உலகளாவிய வெளியீடுகளில் கடந்த 14 மாத காலப்பகுதிகளில்வெளியான அவர்களின் 552 கட்டுரைகள் இதனை நிரூபித்துள்ளன. இதில் பி..பி.சி முதலிடத்தில் உள்ளது. அதன் தலைப்புகளில் 96 சதவீதம் எதிர்மறையாகவே இருந்தன. அடுத்த இடங்களை தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்றவை பிடித்துள்ளன.