கட்டடங்கள் கட்ட வழக்கமாக களிமண்ணால் ஆன செங்கற்கள், கான்கிரீட், நிலக்கரி சாம்பல் கற்கள், ஹாலோ பிளாக் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இவைகளை தயாரிக்க ஏராளமான ஆற்றல், மூலப்பொருட்கள் செலவு, இயற்கை வளங்கள் அழிப்பு, கார்பன் உமிழ்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் பழைய கட்டடங்களை உடைப்பதால் உருவாகும் கழிவுகளும் மறுபயன்பாடு இல்லாமல் சேர்ந்துகொண்டே செல்கின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு தரும் விதமாக, பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) விஞ்ஞானிகள், நிலக்கரி சாம்பல், கட்டட கழிவுகள், ஆல்கலி ஆக்டிவேட்டட் பைண்டர்களைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வை குறைக்கும், ஆற்றலை மிச்சப்படுத்தும் செங்கற்களை கண்டுபிடித்துள்ளனர். குறைந்த வெப்ப கடத்தி, சிறந்த கட்டமைப்பு, நீண்ட ஆயுள் கொண்டதாகவும் இவ்வகை கற்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனை வணிக நோக்கில் செயல்படுத்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம், அடுத்த 9 மாதங்களுக்குள் செயல்படும். இதற்கான பயிற்சி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவி, பாரதம் முழுவதும் வணிக கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற உதவிகளை ஐ.ஐ.எஸ்.சி வழங்கும்.