புதிய ராக்கெட் தொழில்நுட்பம்

பூமியில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் செயற்கைகோளை விண்ணில் செலுத்திய பிறகு கடலில் விழும் அல்லது விண்ணில் தங்கிவிடும். காலாவதியான செயற்கைகோள்களின் விதியும் இப்படிதான். இதன் காரணமாக பூமி, கடல், விண்வெளிகள் கடுமையாக மாசடைகின்றன இதனை தடுக்க நமது பாரதத்தின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ, உலகிலேயே முதல்முறையாக ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சிவனின் சிந்தனையினால் உருவான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் (டி.டி.டி.ஐ), இஸ்ரோவின் பல்வேறு எதிர்கால தொழில்நுட்ப திட்டங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்த அமைப்பு, சிறப்பு உலோகத்தால் கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் தங்காமல் பூமியை நோக்கி விழும்போது வெப்பத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விடும் வகையில் தயாரிக்க முயற்சித்து வருகிறது. இதேபோல கோளாறு அல்லது காலாவதி காரணமாகவே விண்ணில் தங்கி விடும் செயற்கைகோள்களும் பூமியை நோக்கி விழ வைக்கப்பட்டு வெப்பத்தால் எரிந்து சாம்பலாக்கும் தொழில்நுட்பத்தையும் ஆய்வு செய்கிறது. விரிசல்கள் அல்லது சிறு துளைகள் காரணமாக ஏவப்படும் ராக்கெட்டுகள் விபத்தை சந்திப்பதை தடுக்கும் வகையில் தன்னை தானே குணமாக்கி கொள்ளும் சிறப்பு உலோகங்களை பயன்படுத்தி ராக்கெட்டுகள் தயாரிக்கும் திட்டமும் ஆய்வில் உள்ளது. இதைத்தவிர, குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற இதன் சோதனையில் 300 மீட்டர் தொலைவுக்கு இணையம் இல்லாமல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக தொடர்பு கொள்ள முடிந்தது. இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், பாதுகாப்பு துறை முதல் அன்றாடம் நாம் உபயோகிக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரை இது பயன்படும்.