தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. மருத்துவ கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மருத்துவ மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் 37 உள்ளன. இதில் 5,125 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தற்போது இந்த 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கின்றனர்.