மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (என்.ஒய்) தலைவர் ஏ.ஜி சுல்ஸ்பெர்கர் “பாரத பத்திரிகையாளர்கள் பயங்கரவாதிகளாக நடத்தப்படுஇன்றனர்” என்று கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று, யுனெஸ்கோ நிகழ்வில், சுல்ஸ்பெர்கர் பாரதத்தில், அரசு அதிகாரிகள் செய்தி அறைகளில் சோதனை நடத்தியதாகவும், பத்திரிகையாளர்களை பயங்கரவாதிகளாக கருதுவதாகவும் கூறியிருந்தார். இதனை கண்டித்துள்ள அனுராக் தாக்கூர், “எந்தவொரு தவறு நடந்தாலும் பாரதத்தில் சட்டம் அதன் கடமையை செய்யும். ஊடக அமைப்புகள் என்ற நிலையைக் காரணம் காட்டி யாரும் இதில் இருந்து விலக்குக் கோர முடியாது, தப்பிக்க முடியாது. செய்தி அறை எனக் கூறிக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட சட்டம் ஒப்புக்கொள்ளாது. எந்த ஆதாரமும் இல்லாமல், பத்திரிகைகள் மீது விசாரணை நடத்த முடியுமா? பாரதத்தில் பத்திரிக்கையாளர்கள் பயங்கரவாதிகளாக நடத்தப்படுகிறார்கள் என்று வாய் விடுவது தான் புத்திசாலித்தனமா? ‘உண்மைகளை சிதைக்க’ யுனெஸ்கோ மேடையை வெட்கமின்றி பயன்படுத்தி பாரதத்திற்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தை நியூயார்க் டைம்ஸ் நடத்துகிறது” என குற்றம் சாட்டினார். மேலும், பாரதத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் அது ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதை ஜீரணிக்க முடியாமல், சில பழைய உலக ஊடக நிறுவனங்கள் பாரதத்துக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. உண்மையற்ற மற்றும் புனையப்பட்ட பாரத எதிர்ப்புக் கதைகளை எழுதுவதில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த நியூயார்க் டைம்ஸ், உண்மைகளை சிதைக்க யுனெஸ்கோவின் மேடையை வெட்கமின்றி தவறாகப் பயன்படுத்தியுள்ளது. அந்த செய்தித்தாளை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை என்பதா அல்லது ‘நியூ டிஸ்டார்ட் டைம்ஸ்’ என்பதா என்பதை வேறுபடுத்தி பார்ப்பது எனக்கு கடினமாக இருக்கிறது” என சாடினார்.