கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்நிலையில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர்களான அருண்சிங், தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனை எடியூரப்பா அறிவித்தார். பின்னர் கவர்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.