நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு; ராஜினாமா செய்யக்கோரி போராட்டம்

‘இந்திய தொழிலதிபர் ஒருவர், என்னை பிரதமராக்குவதற்காக பல முறை முயற்சித்தார்’ என, நேபாள பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமரான புஷ்ப கமல் பிரசண்டா, நேபாளத்தில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் சர்தார் ப்ரீதம் சிங்கை பற்றி எழுதப்பட்டுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சர்தார் ப்ரீதம் சிங், ஒரு தொழில் அதிபர் மட்டுமல்ல சேவை குணமும் நிறைந்தவர். அவர் என்னை நேபாளத்தின் பிரதமராக்குவதற்காக பலமுறை முயற்சித்தார். இதற்காக நேபாளத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் புதுடில்லியில் வைத்து பலமுறை பேச்சு நடத்தினார்.இவ்வாறு அவர் பேசினார்.

பிரசண்டாவின் இந்த பேச்சு, நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தின் பிரதான எதிர்க்கட்சியான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர் சர்மா ஒலி கூறியதாவது: சட்டவிரோதமாக நேபாளத்தில் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சித்ததற்காக, பிரசண்டா, தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து விட்டார்.

இதற்கு தார்மிக பொறுப்பேற்று, அவர் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தை துவக்குவோம். தற்போதும் இந்தியர்களின் முயற்சியால் தான், அவர் பிரதமரானாரா என தெரியவில்லை. அவரது பேச்சு பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.