திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியம், சி.எஸ்.ஐ.,யில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் லே செயலரின் ஆதரவாளர். திருமண்டல கல்வி நிலவரக் குழு செயலராகவும் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளராகவும் இருந்த எம்.பி.,யை, அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கி, பிஷப் பர்னபாஸ் அண்மையில் உத்தரவிட்டார்.
கடந்த 25ம் தேதி டயோசீஸ் அலுவலகத்தில் இரு தரப்பினர் கூடினர். அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று, இந்த பிரச்னை தொடர்பாக லே செயலர் ஜெயசிங் மற்றும் எம்.பி., ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., அலுவலகம் முன் கூடினர். காலை 11:00 மணிக்கு, பிஷப் பர்னபாசின் ஆதரவாளரான, காட்ப்ரே நோபுள் என்பவர், சிலருடன் சி.எஸ்.ஐ., அலுவலகம் வந்தார். அவர் சி.எஸ்.ஐ., உறுப்பினராக இருந்தாலும், ஜே.எஸ்.எம்., என்ற தனி திருச்சபையின் பிஷப் ஆக செயல்படுகிறார். அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
அவர் தி.மு.க., – எம்.பி., ஞான திரவியத்தை விமர்சித்து ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தி.மு.க., தலைமை, எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனால் ஞானதிரவியம் ஆதரவாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு வந்த காட்ப்ரே நோபிளை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர். கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர். நேற்று மாலை வரையிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.